திங்கள், 25 மே, 2015

தாண்டிக்குடி முருகன்

தாண்டிக்குடி முருகன் 
தாண்டிக்குடி மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சியில் அமைந்துள்ள ஒரு மலை கிராமம் .போகர்  நவபாஷானத்தில் முருகர் விக்ரகங்கள் 7 க்கு குறையாமல் செய்ததாகவும் அவைகள் கொடைக்காணல் மலையில் இருப்பதாகவும் சொல்லப் படுகிறது . அவைகளில் தாண்டிக்குடியில் இருக்கும் பாலசுப்ரமணியம் விக்ரகமும் ஒன்று என்றும் இங்கிருந்து தான் பழனிக்கு தாண்டிக் குதித்ததால் இவ்வூருக்கு தாண்டிக் குடி என்று பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள் , மேலும் இங்கு விபூதி பிரசாதம் கிடையாது மலை மண்ணையே பிரசாதமாக தருகிறார்கள் .

     இங்கு தரிசித்தால் அனைத்து தடைகளும் தாண்டிக் குதித்து ஓடி விடும் என்றும் பிள்ளைப் பேறும்  கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை . மலை கிராமங்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து செல்லும் பழனி பாதயாத்திரை செல்லுபவர்கள் பழனியை தரிசித்து விட்டு இங்கும் தரிசித்தால் தான் விரதம் நிறைவும் பெறும் என்பதையும் கொள்கையாக கொண்டிருக்கிறார்கள் .  

 மேலும் பில்லி சூனியத்தை தீர்க்கும் முருகன் கோவில் இது ஒன்றே என்றும் சொல்லப் படுகிறது . இங்கு மட்டுமே இரவில் தங்காமல் பில்லி சூனியம் வைக்கப் பட்டவர்கள் வெள்ளிக் கிழமைகளில் அபிஷேகம் செய்து கந்தர் சஷ்டி கவசம் படித்தால் நீங்குவதாகவும் சொல்லப்படுகிறது  . 

  இது வத்தலகுண்டு வில் இருந்து மலை சாலையில் 45 கி மீ தூரத்திலும்  , கொடைக்காணல் பெருமாள் மலையில் இருந்து பண்ணைக் காடு வழியாக 67 வது கி மீ தூரத்திலும் உள்ளது . பழனி ,கொடைக்காணல், வத்தலகுண்டு வில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.  

மேலும் ஊர் முழுதும் மிளகு , ஏலக்காய் , காப்பிக் கோட்டைகள்  ,கிச்சலி பழம் சாகுபடிகள் . 
இவ்வளவும் தரையில் உள்ள ஊர்களான வத்தலகுண்டு மதுரைக்கரர்களால் செய்யப் படுகிறது . இவ்வூர்காரர்கள் பொருளாதார முன்னேற்றம் அடையவில்லை . மேலும் போக்குவரத்திற்கு குதிரைகளையும் , டாட்டா எஸ்டேட் ஜீப்புகளையும் பயன்படுத்துகின்றனர் . 

மத்திய அரசின் காப்பி வாரியத்தின் இணை மண்டல அலுவலகமும் அவர்களது குவார்ட்டர்ஸ் ம் உள்ளது . ஆனால் இவ்வளவு பெருமைகள் இருந்தாலும் பேருந்து நிலையத்தில் இருந்து கோவிலுக்கு 2 கி மீ தூரம் சாலை வசதிகள் கிடையாது . எவ்வித சுகாதரமான உணவகங்களும் இல்லை . தங்கும் வசதிகள் இல்லை . 
  
        இதனை அரசு செவி சாய்த்து பக்தர்களுக்கு வசதிகளை செய்தால் இன்னும் முருகனை பெருமைகளை முழுமையாக நாம் உணரலாம் .

   இங்கும் ரியல் எஸ்டேட் பீவரும் உள்ளது .  வெளியூர்காரர்கள் யார் அங்கு சென்றாலும் இடம் வேண்டுமா என்று கேட்டு நச்சரிக்கவும் செய்கிறார்கள் . 

 முடிவாக கொடைக்கானலுக்கு மேல் குளிரையும் அழகையும் மலை மேடுகளையும் கொண்ட தாண்டிக்குடி யில் மகிழ்வை அனுபவிப்பதற்கு பதில் முன்னேறாத , கல்லாமையின் , வறுமையின் தாக்கத்தை சோகத்தை உணர முடிந்தது . 

புதன், 4 பிப்ரவரி, 2015

Pattu calves thai poosam 2015

 

PENANG THAIPUSAM 2015














தைப்பூச விரதம்


ஆறுமுகனின் அருளை அடைவதற்கு உகந்த தைப்பூச விரதம்
தைப்பூசம் என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப் பட்டுவரும் ஒரு விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தைமாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பௌர்ணமியில் வரும். தமிழ் கடவுளாம் முருகப் பெருமான் அவதரித்த நாள் தான் தைபூசமாக கொண்டாடப்படுகிறது.
முருகப்பெருமானுக்கும், தைப்பூசத்திற்கும் உள்ள இத்தகைய தொடர்பின் காரணமாகவே இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரையாக வருகிறார்கள்.
பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.
ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், விரதமிருந்து முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன் சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும்.
தைப்பூச விரத முறை – தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, ருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம்,
திருவாசகம் போன்ற சிவஞான நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். மாலையிலும் குளித்து விட்டுச் சிவ பூஜை செய்ய வேண்டும். உணவு உண்ணாமல் 3 வேளைக ளி லும்பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

2015 பழனி தைப்பூசத் திருவிழா


பழனி தைப்பூசத் திருவிழா: பாதயாத்திரை பக்தர்கள் இலட்சக்கணக்கில் வருகை
பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திங்கள் கிழமை பல இலட்சம் பக்தர்கள் பழனியில் குவிந்ததால் காணும் இடமெங்கும் காவி உடை தரித்த பக்தர்களே இருந்தனர்.
பழனி தைப்பூசத் திருவிழா கடந்த புதன்கிழமை 28/01/2015 கொடி யேற்றத்துடன் துவங்கிய நிலையில் திங்கள்கிழமை பழனி நோக்கி திண்டுக்கல் சாலையிலும்,தாராபுரம்சாலையிலும், உடுமலை சாலையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் இருந்தனர். இடும்பன் கோயில், சண்முகநதியில் புனித நீராட ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் நதியில் நீராடினாலும் பக்தர்கள் பயன்பாடு கருதி கரையில் தண்ணீர் தொட்டிகள், ஷவர்பாத்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி உடைமாற்றும் அறைகளும் அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் நீராடும்போது விபத்து நேரிடாவண்ணம் தீயணைப்பு வீரர்கள் சிறிய படகுகளில் ரோந்து சுற்றியவண்ணம் இருந்தனர்.
காரைக்குடியில் இருந்து வந்திருந்த நகரத்தார், நாட்டார் காவடிகள் ஆயக்குடி அகோபிலேஸ்வரர் கோயிலில் தங்கி திங்கள்கிழமை 02/02/2015 கிளம்பியபோது காவடி கூட்டத்தை கண்டு வணங்க ஏராளமானோர் குவிந்திருந்தனர். இந்தமுறை நகரத்தாரின் வைரவேலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்தர்கள் செல்லும் படிவழிப்பாதை, வின்ச், ரோப்கார் நிலையங்களில் எங்கும் காவிவேட்டி யுடன் உள்ள பக்தர்களே காணப்பட்டனர்.
மலைக்கோயிலில் குவிந்த கூட்டத்தால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்தனர். தவிர அடிவாரம், சன்னதி வீதி, பேருந்து நிலையங்களில் போலீஸார் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். நகராட்சி மேல்நிலைப் பள்ளியில்அமைக்கப்பட்டதற்காலிக பேருந்து நிலையத்தால் ஓரளவு கூட்ட நெரிசல் தவிர்க்கப் பட்டது. கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பக்தர்கள் உடனடியாக வெளியூர் கிளம்பி செல்ல வசதி இருந்தது.
மாவட்ட நிர்வாகம், திருக்கோயில் நிர்வாகம் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தனர்.

உலக தைப்பூசங்கள்


உலக தைப்பூசங்கள் 

 பழனி (திருவாவினன்குடி - சக்திகிரி) முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஒரு மலைக் கோவிலாகும்.
மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் மூலவர் சிலையை நவபாஷாணத்தால் செய்து நிறுவியுள்ளார்.
இக்கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும் முக்கிய விழாவாகும்.
ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும்.
முருகன் தன இரு துணைவியரான வள்ளி மற்றும் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருகிறார்.
பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது.
தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வாடிக்கை.
பக்தர்கள் பல பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள். பக்தர்கள் பலநாட்கள் விரதமிருந்து காவடி எடுக்கிறார்கள். காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன. காவடிகளில் பல வகை உண்டு.
அலகு குத்துதல் - நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.
சர்க்கரை காவடி - சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
தீர்த்தக் காவடி - கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
பறவைக் காவடி - அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.
பால் காவடி - பால்குடம் காவடியாகப் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
மச்சக்காவடி - மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
மயில் காவடி - மயில் தொகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
பினாங்கு தைப்பூசம்
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாநகர அருகில் உள்ள தண்ணீர் மலை கோவிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
தண்ணீர் மலை கோவில் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பெரியதாகும்.
தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிரார்கள்.
இத்தைப்பூசத் திருநாள் மூன்றுநாள் நடைபெறும். தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
ஈப்போ ஸ்ரீ சுப்பிரமணியன் கோவில்
மலேசியாவில் ஈப்போ அருகில் குனோங் சீரோ என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியன் கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது .
மொரீஷியசில் தைப்பூசம்
சுப்பிரமணியருக்கு மொரீஷியசில் தைப்பூசத் திருவிழா எடுக்கிறார்கள். காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்கள் இங்கும் உண்டு.
பத்துமலை முருகன் கோவில்
மலேசியாவில் பத்து மலை முருகன் கோவில் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும்.
பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ளது. இது ஒரு மலைக்கோவில்; சுண்ணாம்புப் பாறைகளாலான மலை இது. வரிசையாக அமைந்த குகை அல்லது குகைக் கோவில்களை இங்கு காணலாம்.
மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது.
சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்துமலையில் குவிகிறார்கள்.
தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிருந்து பத்து மலைக்கு அதிகாலையில் தொடங்கி ஊர்வலமாக நடந்து வருகிறார்கள். இதற்கு எட்டு மணி நேரமாகும். நேர்த்திக்கடன் செலுத்த சிலர் காவடி எடுத்து வருகிறார்கள். அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவோர் உண்டு.
சுங்கை பத்து ஆற்றில் நீராடிவிட்டு, மலைக்கோவிலுக்கு 272 படிகள் ஏறி வருகிறார்கள்.
தைப்பூசம்
2014 Friday, 17 January 2014
2015 Tuesday, 3 February 2015
2016 Saturday, 23 January 2016

தைப்பூசம் history

முருகனுக்கு அரோகரா -  முருகனடிமை இராமநாதன்  



கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா

உலகெங்கும் உள்ள இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகள் விழாக்கள், உற்சவங்கள், விரதங்களுக்கு விஞ்ஞான, மெய்ஞானப்படி சில தத்துவங்கள், புராண இதிகாச பின்னணிகள் உண்டு. அந்த வகையில் வெகு விமரிசையாகவும் பக்திப் பெருக்குடனும் கொண்டாடப்படும் விழா தைப்பூச திருநாளாகும். தைப்பூசத்துக்கு பல சிறப்புகள் உள்ளன. முக்கியமாக மூன்று சிறப்புகள். முதலாவதாக இந்த திருநாளானது சிவனுக்கும் அம்பாளுக்கும் உகந்த நாள். இரண்டாவதாக தகப்பன் சாமி முருகனுக்கு மிகவும் விசேஷமான நாள். மூன்றாவதாக அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஜோதி வழிபாட்டை துவங்கிய திருநாள். அத்துடன் அவர் மகா சமாதியானதும் தைப்பூசத்தில்தான். இப்படி பல சிறப்புகள் கொண்ட தைப்பூசம், தை மாதத்தில் பெரும்பாலும் பவுர்ணமி திதியில் வரும். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக தாண்டவம் (நடனம்) புரிவார். நடன நிலையில் இருக்கும் சிவனை ‘நடராஜர்’ என்கிறோம். நடராஜப் பெருமான் தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனமாடுகிறார். இந்த நிலையையே ‘உமா மகேஸ்வரர்’ என்று வழிபடுகிறோம். உமா மகேஸ்வர நடனத்தை பூச நட்சத்திரத்தில் அரங்கேற்றியதாக ஐதீகம்.

தை மாதம் சூரியன் மகர ராசியிலும், தைப்பூச நாளில் சந்திரன் கடக ராசியில் சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் சஞ்சரிக்கிறார். சூரியன் பார்வை சந்திரன் மீதும் சந்திரன் பார்வை சூரியன் மீதும் விழுகிறது. இது மிகவும் உன்னத நிலையாகும். கடக ராசி ஜலராசியாகும். மகர ராசி ஜலராசியாகும். இந்த இரண்டு ஜல ராசிகளில் சிவ, சக்தி சொரூபமான சூரிய, சந்திரர் சம சப்தமமாக பார்த்துக் கொள்கின்றனர். சூரியன் சிவ அம்சம், சந்திரன் அம்பாள் அம்சம். சூரியனால் ஆத்ம பலமும், சந்திரனால் மனோபலமும் உண்டாகிறது. இறைவனும், இறைவியும் இணைந்து நடனம் புரிந்த இந்த தைப்பூச திருநாள் மிகவும் விசேஷமான நாளாகும். தேவ குருவான பிரகஸ்பதிக்கு பூசம் நட்சத்திரம் என்பதால் அன்றைய தினம் குரு வழிபாடு செய்வதும் சிறப்பு.

தைப்பூசம் காவடிப் பிரியன் கந்தனுக்கும் மிகவும் உகந்த நாள். ஒரு தைப்பூச நன்னாளில்தான் வள்ளியை முருகப் பெருமான் மணமுடித்தார். தாரகாசுரனை வதம் செய்ய தாய் பார்வதி தேவியிடம் வேல் வாங்கிய நாளும் தைப்பூச திருநாளே. இன்றைய தினம் முருக பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, சேவற்காவடி, மச்சக்காவடி, தீர்த்தக்காவடி என அவரவர் பிரார்த்தனைக்கு ஏற்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் மெய் சிலிர்க்கும் நேர்த்திக் கடன்கள் செலுத்தியும் கந்தப் பெருமானை வணங்குவார்கள். தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளிலும் மருதமலை, சிக்கல் வயலூர், குன்றக்குடி, விராலிமலை, வல்லக்கோட்டை, திருப்போரூர், குன்றத்தூர் உள்பட அனைத்து முருகன் கோயில்களிலும் உற்சவங்கள், சிறப்பு பூஜைகள், யாகங்கள், திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் போன்றவை மிக விமரிசையாக நடக்கின்றன. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகள், நேர்த்திக் கடன்கள் செலுத்தும் நாளாக தைப்பூசத்தை கொண்டாடுகிறார்கள். மலேசியாவில் உள்ள பத்துமணி முருகன் கோயிலில் தைப்பூச விழா கோலாகலமாக நடக்கும். இந்த நன்னாளில் விரதம் இருந்து அவரவர் வழக்கப்படி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து பக்தி பாமாலை பாடி எல்லா நலன்களும், வளங்களும் பெறுவோமாக!