செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

தைப்பூசம் history

முருகனுக்கு அரோகரா -  முருகனடிமை இராமநாதன்  



கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா

உலகெங்கும் உள்ள இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகள் விழாக்கள், உற்சவங்கள், விரதங்களுக்கு விஞ்ஞான, மெய்ஞானப்படி சில தத்துவங்கள், புராண இதிகாச பின்னணிகள் உண்டு. அந்த வகையில் வெகு விமரிசையாகவும் பக்திப் பெருக்குடனும் கொண்டாடப்படும் விழா தைப்பூச திருநாளாகும். தைப்பூசத்துக்கு பல சிறப்புகள் உள்ளன. முக்கியமாக மூன்று சிறப்புகள். முதலாவதாக இந்த திருநாளானது சிவனுக்கும் அம்பாளுக்கும் உகந்த நாள். இரண்டாவதாக தகப்பன் சாமி முருகனுக்கு மிகவும் விசேஷமான நாள். மூன்றாவதாக அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஜோதி வழிபாட்டை துவங்கிய திருநாள். அத்துடன் அவர் மகா சமாதியானதும் தைப்பூசத்தில்தான். இப்படி பல சிறப்புகள் கொண்ட தைப்பூசம், தை மாதத்தில் பெரும்பாலும் பவுர்ணமி திதியில் வரும். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக தாண்டவம் (நடனம்) புரிவார். நடன நிலையில் இருக்கும் சிவனை ‘நடராஜர்’ என்கிறோம். நடராஜப் பெருமான் தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனமாடுகிறார். இந்த நிலையையே ‘உமா மகேஸ்வரர்’ என்று வழிபடுகிறோம். உமா மகேஸ்வர நடனத்தை பூச நட்சத்திரத்தில் அரங்கேற்றியதாக ஐதீகம்.

தை மாதம் சூரியன் மகர ராசியிலும், தைப்பூச நாளில் சந்திரன் கடக ராசியில் சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் சஞ்சரிக்கிறார். சூரியன் பார்வை சந்திரன் மீதும் சந்திரன் பார்வை சூரியன் மீதும் விழுகிறது. இது மிகவும் உன்னத நிலையாகும். கடக ராசி ஜலராசியாகும். மகர ராசி ஜலராசியாகும். இந்த இரண்டு ஜல ராசிகளில் சிவ, சக்தி சொரூபமான சூரிய, சந்திரர் சம சப்தமமாக பார்த்துக் கொள்கின்றனர். சூரியன் சிவ அம்சம், சந்திரன் அம்பாள் அம்சம். சூரியனால் ஆத்ம பலமும், சந்திரனால் மனோபலமும் உண்டாகிறது. இறைவனும், இறைவியும் இணைந்து நடனம் புரிந்த இந்த தைப்பூச திருநாள் மிகவும் விசேஷமான நாளாகும். தேவ குருவான பிரகஸ்பதிக்கு பூசம் நட்சத்திரம் என்பதால் அன்றைய தினம் குரு வழிபாடு செய்வதும் சிறப்பு.

தைப்பூசம் காவடிப் பிரியன் கந்தனுக்கும் மிகவும் உகந்த நாள். ஒரு தைப்பூச நன்னாளில்தான் வள்ளியை முருகப் பெருமான் மணமுடித்தார். தாரகாசுரனை வதம் செய்ய தாய் பார்வதி தேவியிடம் வேல் வாங்கிய நாளும் தைப்பூச திருநாளே. இன்றைய தினம் முருக பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, சேவற்காவடி, மச்சக்காவடி, தீர்த்தக்காவடி என அவரவர் பிரார்த்தனைக்கு ஏற்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் மெய் சிலிர்க்கும் நேர்த்திக் கடன்கள் செலுத்தியும் கந்தப் பெருமானை வணங்குவார்கள். தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளிலும் மருதமலை, சிக்கல் வயலூர், குன்றக்குடி, விராலிமலை, வல்லக்கோட்டை, திருப்போரூர், குன்றத்தூர் உள்பட அனைத்து முருகன் கோயில்களிலும் உற்சவங்கள், சிறப்பு பூஜைகள், யாகங்கள், திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் போன்றவை மிக விமரிசையாக நடக்கின்றன. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகள், நேர்த்திக் கடன்கள் செலுத்தும் நாளாக தைப்பூசத்தை கொண்டாடுகிறார்கள். மலேசியாவில் உள்ள பத்துமணி முருகன் கோயிலில் தைப்பூச விழா கோலாகலமாக நடக்கும். இந்த நன்னாளில் விரதம் இருந்து அவரவர் வழக்கப்படி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து பக்தி பாமாலை பாடி எல்லா நலன்களும், வளங்களும் பெறுவோமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக